Wednesday 24 December 2014

கணித மேதை இராமாநுஜம்

ஈரோட்டில் பிறந்து
தேரோட்டும் கும்பகோணத்தில் படித்த
எண்கோணம் நீ.

டிசம்பரில் பூத்த
கணித மலர்.

பூஜ்ஜியத்தால்
புகழ்பெற்றவன்.
உனது
ராஜ்ஜியத்தின்
வாசலுக்கு வருவதற்கே கூட
வழிதெரியாமல்
விழி பிதுங்கும் மேதைகள்.

Town High School ல்
Top மாணவன் நீ
அரசு ஆடவர் கல்லூரியில்
மாணவனாக இருந்தபடியே
கணித
போதகராகவும் உருவெடுத்த
வித்தகன் நீ.

எண்களைப்போலவே
எண்ணிடலங்காப் புகழ் உனக்கு
உன்
கண்களின் தீட்சணியம்
கணக்குகளின் தாட்சணியம்

விதிகளை உடைத்து
விடை சொன்னவன் - நீ
% பற்றி சொல்ல
ஹீரோ ஆனவன் நீ

மதியைக் கொண்டே
மலையளவு கணக்கையும்
மனக்கணக்காய்
தினையளவு நேரத்தில்
தீர்வு சொன்னவன் நீ.

காலனின் கணக்கு
உன்னுடைய விஷயத்தில் மட்டும்
உறுத்தலாக உள்ளது.
பால வயதில்
பலபுகழ் பெற்ற உன்னை
இளம் வயதிலேயே
எடுத்துக்கொண்ட
எமனை என்ன செய்ய?

நீ
முடிக்கவேண்டிய கணக்கு
மூளைக்குள் நிறைந்திருக்க
உன்னுடைய
கணக்கை முடித்த
காலனை என்ன செய்ய?

உன்னுடைய தேற்றங்கள்
கணிதத்தில்
கொண்டுவந்த மாற்றங்கள்
அதனால் ஏற்றங்கள்
ஆனாலும் ஏமாற்றங்கள்
முழுமையடையாததால்.

அறிஞர்களின் தொடர்பு கிடைத்து
அயல்நாடு சென்றாய்
உன்னை
உருக்குப்போட்ட நோய்
எலும்புகளை மட்டுமா உருக்கியது
எண்களையும் அல்லவா நொறுக்கியது
எங்களையும் அல்லவா நொறுக்கியது

மறுபடியும்
நீ பிறந்து வர வரமில்லையா
மறுபடியும்
நீ பிறந்து வர வரமில்லையா
ஆயிரம் கால்குலேட்டர்களின்
அவதாரம் நீ
கோடி கம்ப்யூட்டர்களின்
குன்று நீ
உன்
மூளையில் மட்டும்
செல்களுக்கு பதிலாக
எண்கள்தானே இருந்தது
உன்னுடைய உடம்பில் மட்டும்
நரம்புகளுக்கு பதிலாக
நாற்கரத்தேற்றம்தானே இருந்தது
உன்னுடைய உடம்பில் மட்டும்
குருதிக்கு பதிலாக
பரிதி நதிதானே ஓடியது

புதிருக்கெல்லாம்
தீர்வு சொன்னவன் நீ
உன்
வாழ்க்கை மட்டும் புதிரானது எப்படி?
நீ
உன் வாழ்க்கையைக்
கணக்காகத்தான் வகுத்தாய்
கணக்குக்காகவே வகுத்தாய்

உன்னிடத்தில்
பிரதியிட்டுப்பார்க்க
இனியொருவன்
பிறந்துதான் வரவேண்டும்

நீ
கணக்குக்கதிர்களை வெளியிட்ட
கதிரவன்
நீ
ஒரு
கணக்கு π(பை)த்தியம்

கடல் கடந்து பத்தியம் இருந்தும்
எங்களால்
காப்பாற்ற முடியாத பத்திரம் நீ

கோடுகளால்
உருவான சித்திரம் நீ
புகழெனும் கோட்டுத்துண்டுகளால்
நாட்டுடைமையான
கணித சத்திரம் நீ

புள்ளிகளின்
கோலம் மட்டுமே
போடத்தெரிந்தவர்கள் மத்தியில்
புதியதொரு
பள்ளியையே நிறுவிமளவிற்குப்
பாடம் சொன்னவன் நீ.

உனது
சகாவாக
"பகா எண்களை"யே பார்த்தாய்
அதிலும்
"1729" என்ற உண்
இராமானுஜ எண்
என்று பெயர் சூட்டுமளவிற்கு
இறவாப் புகழ் சேர்த்தாய்

எண்களில் மட்டுமல்ல
அன்பிலே
ஹார்டியின்
ஹார்ட்டையே நிறைத்தவன் நீ
கண்களில் கண்ணீர் ததும்ப
முதன்முதலாக
ஒரு
கணித ராஜாவை கப்பலில் ஏற்றி
விடை கொடுத்த
ஹார்டி
உன் வாழ்வின் மைல்கள்.

முப்பத்து மூன்று வயதுகூட
நிரம்பாமல்
விரும்பாமல்
விடை பெற்றாய்.

கணக்கைக் காப்பாற்றிய
உன்னைக்
காப்பாற்ற முடியவில்லை

உன்னை மணந்து
ஒராண்டு மட்டுமே சேர்ந்து வாழ்ந்து
உன்னையும் எண்ணிக்கொண்டு
நாட்களையும் எண்ணிக்கொண்டு
நடுகல்லாய் வாழ்ந்து...
(தொண்ணூறு வயதுவரை வாழ்ந்து)
உனக்குச்
சிறப்புச் சேர்ப்பதற்காகவே
சிலையாய் வாழ்ந்த உண் மனைவி...
உனக்குச்
சமமான
மனான பின்னம்

வயிற்றுக்கும்
மூளைக்கும் நடந்த போராட்டத்தில்
காணாமல் போய்விடாமல்
கணக்குப் போட்டவன் - நீ
அந்த வகையில்
மாணவர்களின்
நம்பிக்கை நட்சத்திரம்.

உன்னுடைய
புதிர்களெல்லாம்
புதிராகவே இருக்கிற்து.
பூட்டிய பெட்டிக்குள்
நீ
கிழித்துப்போட்டதைக்கூட
முழுக்கப் புரியாமல்
மூளையைக் காய்ச்சுகிறது.

நீ
கிறுக்கியவை கூட
கணித சரித்திரமாக
காணப்படுகிறது.

இப்படி
கும்பகோணத்திற்கு
எல்லா கோணங்களின்
Infinite - யாக( \infty) புகழ்சேர்த்த
Integeration - நீ


தோன்றிற் புகழொடு தோன்றுக
அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
என்ற
குறளின்
குறியீடு நீ

உன்
அறிவிற்கு ஈடு எது?
உம்மை வணங்குகிறோம்
கரங்களால் மட்டுமல்ல
கணிதத்தாலும் தான்

No comments:

Post a Comment