Wednesday 3 December 2014

"பாரதியின் மயக்கம்"

அன்புள்ள பாரதி
அன்புள்ளம்
உண்டா உனக்கு?
எதற்காகச் சொன்னாய்
இப்படி?
மங்கையராய் பிறப்பதற்கே
நல்ல
மாதவம் செய்திட வேண்டுமென்று?

கருவறைக்குள் இருக்கும் போதே
தொட்டிலுக்கு கட்டுவதா
நாலுகால்
தூளி கட்டுவதா
என்ற தீர்மானம்...

அதற்கும்
தப்பிப்பிழைத்தால்
கள்ளிப்பால்
கள்ளிப்பாலையும்
கடந்துவந்தால்
துள்ளி விளையாடும் வயதில்
துண்டு துண்டாய்
எத்தனையோ சங்கடங்கள்
துண்டிக்கப்பட்டதாய்
துள்ளல் விளையாட்டுகள்
அம்மா அப்பாவின்
குடும்ப பாரமெல்லாம்
கணிசமான அளவில்
எங்களின் தலையில் விழும்.

பழைய சோற்றில் ஆரம்பித்து
அரசு பள்ளிக்கூடம் என்று
பாகப்பிரிவினைகள்
பங்கு போடும்
இத்தனையும் மீறி
எங்கேனும்
வேலைக்குச் செல்கையிலே.....
சேலைக்கு தரப்படும் மதிப்பு
சேதாரத்திற்கு உட்பட்டது.
அது
ஆதாரமாக எதைத்தேடினாலும்
ஆயிரம் கைகள்
அன்பு காட்டும்
அத்தனையும்
அணைத்தே அன்பு காட்டும்.

நாங்கள்
இருந்தால் மட்டும்
வயிற்றில்
நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது போல
என்று
வார்த்தைக்கு வார்த்தை சொல்லும்
வர்ககங்கள்
வாழ்வின் எச்சங்கள் வரை
அத்தனையும் அச்சங்கள்

பூஜித்து பூஜித்தே
பூஜ்ஜியம் ஆக்கியாச்சு
வாழ்க்கை
யாசித்து யாசித்தே
யந்திரமாச்சு

உடம்பின் வலி
உணர்வின் வலி
குழந்தைப்பேறு
குடும்பப்பேறு
கலாச்சாரக் கோட்பாடு
பண்பாட்டுச்சின்னம்
இப்படி...
லொட்டு லொசுக்கு
என்று...
இன்ன பிறவும்...
அத்தனைக்கும்
போராடும் போது
நீரோடும் விழிகளை
நின்று துப்பார்
கிடைத்ல் அரிது.

உண்மையில்
இங்கு
நல்ல துணை கிடைத்தாற்போல்
நற்கதி கண்டவர் இல்லை.
பூலோக சொர்க்கம்
இனிய இல்லறம்...
அதனால்...
பெண்ணாய்ப் பிறத்தல்
மாதவம் அல்ல
அவள்
அற்புதமான ஆணோடு
அன்புற்று இருத்தலே
அழகான தவம் என்று
புறப்பட்டு வந்து
புதிதாய் சொல்லிப்போ பாரதி....!


No comments:

Post a Comment