Friday 28 November 2014

ஆயத்தப்படுத்துதல்

நிகழ்ச்சிகள் யாவும்
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவது
மனதை ஒருமுகப்படுத்த ஆயத்தப்படுத்துதல்

அம்மா
தேன்குழைத்து தருவது
மழலைக்கு
கசப்பு மருந்து கொடுக்க ஆயத்தப்படுத்துதல்

புதியவர்களைப் பார்க்கும்போது
ஓர்
புன்சிரிப்பு உதிர்வது
இனி
நட்பு பலப்படல்வேண்டும் என்ற
நல்லெண்ண ஆயத்தப்படுத்துதல்

பதியமிடும்போது
புதிய செடியோடு
கொஞ்சம் மண்ணையும்
கொண்டு வருவது
ஆணிவேரை
ஆழமாக்க ஆயத்தப்படுத்துதல்

ஊர் கூடி தேர் இழுப்பது
ஒற்றுமைக்கு ஆயத்தப்படுத்துதல்
உன்னத தியானம் மேற்கொள்வது
உள்ளத்தில்
வலிமைக்கு ஆயத்தப்படுத்துதல்

காலார தினம் நடப்பது
ஓசோனின் உன்னதத்தை
ஒரு துளியேனும் உணர ஆயத்தப்படுத்துதல்
வாழ்த்து தெரிவிப்பது
வருங்கால நலவாழ்விற்கு ஆயத்தப்படுத்துதல்

காய்த்து முடிவது
கனிகளாவதற்கு ஆயத்தப்படுத்துதல்
கிழக்கு வெளுப்பது
விடியலுக்கு ஆயத்தப்படுத்துதல்
வழக்கு முடிவது
வக்கீல் ஃபீஸிற்கு ஆயத்தப்படுத்துதல்

கல்வி போதிப்பது
களர் நிலத்தை
விளைநிலமாக்க ஆயத்தப்டுத்துதல்
பள்ளிகள் இருப்பதே
ஒழுக்க நீதிகள்
உயிர்பெற ஆயத்தப்படுத்துதல்

அரசியல்வாதிகள்
ஓட்டு வாங்க வருவது
உள்ள(த்)தை கொள்ளை கொடுக்க
ஊரை ஆயத்தப்படுத்துதல்

பசியுடன் ஏழை
பாத்திரத்தை நீட்டுவது
யாரையும்
கர்ணனாக்க ஆயத்தப்படுத்துதல்

புகழ்ச்சிகள் யாவும்
புரையோடிய மனதை
பூப்பூக்க வைக்க ஆயத்தப்படுத்துதல்
சுண்ணாம்பு அடித்து
சுத்தம் செய்து
வேண்டாத பொருளையெல்லாம்
வீதியில் எரித்து
போகி கொண்டாடுவது
பொங்கலுக்கு ஆயத்தப்படுத்துதல்

மார்கழி மாதத்திலிருந்தே
மாக்கோலம் போட்டு
வைகறை துயிலேழுந்து
வயல்களின் நெல், கரும்பு, வாழை
வாசலுக்கு வருவது
தை மகளை வரவேற்க
தரணியை ஆயத்தப்படுத்துதல்

நோன்பிருந்து
நுட்பமாய் பிறைபார்த்தல்
ரமலானுக்கு ஆயத்தப்படுத்துதல்
வண்ண வண்ண
அலங்காரங்கள்
இன்னமுது கேக்குகள்
இல்லந்தோறும் இருப்பது
கிறிஸ்துமஸ் தினத்திற்கு ஆயத்தப்படுத்துதல்

எங்கும் வலிமை வெள்ளம்
இந்தியா வல்லரசாக
இளைஞர்களை ஆயத்தப்படுத்துதல்.
ஆயத்தப்படுத்துதல் அவசியம்
பெரிய செயல் சிறிய செயல் ஏதுமில்லை
அரிய செயல் எளிய செயல் ஏதுமில்லை
அத்தனைக்கும்
ஆயத்தப்படுத்துதல் அவசியம்.
ஆயத்தப்படுத்துதல்
அற்புதமாய் இருந்தால்
காயம்படாமல் வெற்றிகள் குவியும்.

இயற்கையெனும்....

எழில் கொட்டும்
இயற்கையே
உன்னளவு திறமை
எங்களுக்கும் உண்டு

நீ
மண்ணில் மட்டும்தான்
மலைகளையும்
பள்ளங்களையும் படைத்தாய்
நாங்கள்
எங்கள்
மனதுக்குள்ளேயே
மறைத்து வைத்துள்ளோம்

நீ
எல்லாவற்றிலும்
இனங்களை புகுத்தினாய்
நாங்கள் கூட
எங்களை கூறுபோட்டு
நாறிக்கிடக்கிறோம்

மண்ணின் மார்பில்
பாலைப் பார்த்து
பரிதவிக்கும்
பயிர்குழந்தைகளை
நீ மட்டும் படைக்கவில்லை
நாங்களும் படைத்துள்ளோம்

பொங்கத்துடிக்கும்
தங்க நிலங்களை
பாலை நிலமென
பாகம் பிரித்து
தாகம் தீர
தண்ணீர் மறுத்தாய்
நாங்கள் கூட
வாழத்துடிக்கும்
விதவைகளின் வாழ்வை
பாலை நிலமாக்கி
பாழடித்து வருகிறோம்

ஆனாலும்
ஆண்டுக்கொரு முறை
சரிசமமாக்கி
சமாதானம் செய்ய
அனுப்பி வைபாய்
ஆவேசக்காற்றை
எங்களில் கூட
ஈரோட்டுக்காற்று
புறப்பட்டு வந்து
பூகம்பத்தை ஏற்படுத்தியது

அந்த
பூகம்பத்தை சில
புழுக்கள் வெறுத்தன
நாங்களோ
அந்த
"பூ" கம்பத்தில்தான்
பொருத்தினோம்
பகுத்தறிவி கொடிகளை

பாரதிதாசன்

கடலின் ஆழத்தை
கடற்கரைத் துகளொன்று
அணுவிலும் அணுவொன்று
ஆராய்ந்து பார்க்கிறது.

எத்துணை சிறிய இடத்திலும்
பதுவிசாய் அமரும்
புதுக்கவிதை போல
எத்துணை சிறிய பாக்களிலும்
பளிச்சிடும் பொறிகள்

காயசண்டிகையாய்
காய்ந்திருந்த தமிழுக்கு
அமுத சுரபியை
அளித்த மணிமேகலை

உனது
பாக்களின் கால்கள்
பட்டபோதுதான்
அகலிகை மனங்கள்
அறிவு பெற்றன.

உனது
"பா" ரதத்தில்
பவனி வருகையில்
சங்கத்தமிழ்
தங்கமாய்த்தான்
தகதகக்கிறாள்

எங்களை
மூட நம்பிக்கையுடன்
இணைத்த நூல்களை
கத்தரிபோல்
கத்தரித்தவை
உன் கவிதைகள்

தாமரைப்பூத்த
தடாகங்களை கண்ட
கவிஞரெல்லாம்
பாவைகளின் அழகை
பாத்தபோது
படைத்தவன் கையை
பார்தவன் நீ

ஆராய்ச்சி செய்த
அணுவிலும் அணுவொன்று
முடிவில்
முணுமுணுத்தது
தமிழ்க்கடலில்
பேனாத்தூண்டிலால்
எடுத்த சொற்களால்
எழுதிய உன்னை
வாழ்த்தத் தோன்றவில்லை
வணங்கத்தான் தோன்றுகிறது

ஏழை

நாங்கள்
பாரதத்தாயின் பாதம்
ஆட்சி மாளிகையின்
அஸ்திவாரம்

இந்தியப்பட்டம்
இமயம் வரைப் பறக்க
நூலாய்இளைத்த
ஏழைகள்

அன்று
துன்பக்கடலில்
துயருற்றபோது
பயணப்படகுகளில்
பயணமானோம்
இன்றுதான் புரிகிறது
துடுப்புகளாகத்தான்
தூண்டப்பட்டோம் என்று

எங்களது
பாதை தெரியாததால்தான்
போதையில் தடுமாறுகிறோம்
எங்களுக்கும் இன்பத்திற்கும்
எட்டாத மீட்டர்
என்பதால்தான்
மில்லிகளில்
மிதக்கிறோம்


பெண்

தெய்வமாய் பூஜித்தவர்கள்
"கருவறையை" விட்டு
வெளிவர அனுமதிக்கவில்லை

பொக்கிஷமாய் நினைத்தவர்கள்
பூட்டியே பத்திரப்படுத்தினார்கள்

பூவாய் நினைத்தவர்கள்
பொருத்தமின்றி
நாரோடு கட்டிப்போட்டார்கள்.

யோகப்பொருளாகவும்
போகப்போகப்
போகப்பொருளாகவும்
நினைத்தார்கள்

ஆயிரம் காலத்துப்பயிருக்கு
இவள் ஒருத்தியின்
தாலியே வேலியாக்கப்பட்டது

ஆண்களின் கற்பு
அவசியமில்லாத ஒன்றானது

வெறும் வாய்க்கு
இவள் அவலானாள்
தெரு வாய்க்கும்
இவள் அவலானாள்

எல்லா நிலைகளிலும்
அவளது நிலை
அவலநிலை
ஆகிவிட்டது.

பெண்களின் சுதந்திரம்
பிரமிப்பை ஏற்பதுத்துகிறது
அந்த
பிரமிப்புகள் எல்லாம்
பிரமிடுகளின் மேல்தான்...

பாரதத்தாயைப்
பெண்ணாக பார்த்தவர்கள் தான்
இன்று
எய்ட்ஸ்க்குக் கூட
இவளே
எடுத்துக்காட்டானாள்.

Friday 14 November 2014

"என் உயிர் கண்மணிக்கு...... அம்மா..."

சின்ன மொட்டிற்கு
இதழ்விரி
என்று
யாரும் சொல்வதில்லை

என்
பட்டுக்குட்டி
உன்னைமட்டும்
எழுப்பவேண்டியிருக்கின்றதே
காலையில் சரியா?

குட்டிப்பூனையும்
பாலிருக்கும் இடத்தைப்
பார்த்து வருகிறது

என்
செல்லப்பூவே
உனக்கு மட்டும் பாலை
உன்னருகில் கொண்டுவர வேண்டியுள்ளதே
சரியா?

பார்
சின்னஞ்சிறு குருவிகளை
பழக்கமாய்
குளிக்கச் செல்லும்
குழிகளில் தண்ணீர்கிடந்தால்
சிறகுகளை சிலுப்பி
சீக்கிரம் காயவைக்கும்

என்
வண்ண மயில்!
உனக்கு மட்டும்
குளிக்க வைக்க
எல்லாம் எடுத்துவைத்தும்
எத்தனைமுறை கத்தவேண்டியுள்ளது?
அதுவும்
தலைகுளித்தால்
காயவைப்பதற்குள்
காய்ந்துபோகும் என் தொண்டை.

பழங்கள்
பல திண்ணும்
பக்குவமாய் உயிர்களுமே.
மாதுளையைத் தவிர
மகத்தான பழம் எதையும்
தீண்டாமலிருப்பது
வேண்டாத செயலல்லவா?

அந்தந்த காலத்தில் கிடைக்கும் பழங்கள்
அத்தனையிலும்
சிறிதளவே தின்றாலும்
சீக்கு வருமாடி கனிமொழியே...

மின்மினி பூச்சி கூட
சிறகடிக்கும் நேரம்தான்
ஜொலிக்கிறது
அதனால்
உடற்பயிற்சி செய்தால்தான்
உடல்வலிமை பெறும்
கடல் வலிமை வரும்

கலாச்சார பழக்கங்களை
கணிப்பொறி காலத்திலும்
மறக்காமல் இருந்தால்
மருந்து எதுவும் வேண்டாம்.

தியானத்தால் போகாத
தீராத நோய் இல்லை
உள்ளுக்குள் இறைவன்
உறைகின்றான்.
உறுப்புகளிலெல்லாம் வியாபித்திருக்கின்றான்
என்ற
எண்ணத்தில் உடல் காத்தால்
என்ன ஆனாலும்...
எதுவுமே ஆகாது மனதிற்கு

குக்கரில் சாதம் வைத்தாலும்
குனிந்து கோலம் போட தவறாதே...
மனசு T.V. பார்க்க
மக்கரே செய்தாலும்
விடியலில் நடந்து
விரட்டு நோயை
ஓஸோன் காற்றை
உள்வாங்கு
'ஓஷோ'வின் வரிகளில்
உள்ளத்தை கொடு.

கண்களுக்குப்
பசுமையை விருந்தளி
கருவிழியை பந்தென நினைத்து
நீயே
இரண்டு நிமிஷம் உருட்டி விளையாடு
பார்வையின் வீச்சும்
பார்வையின் கோணமும் விரியட்டும்.

“பார்வையை அகண்டமாக்கு”
பாடிய
பாரதிதாசனை நினை
மேலோட்டமாகவும்… ஆழத்தோடும்…

எப்போதும்
எதையேனும் நினைத்து
உழன்றுகொண்டேயிருக்கும்
உள் மனத்திற்குள்
ஒரு “குறளை” எழுதிப்போடு.
மாவரைக்கும் இயந்திரமாய்
மனசு
குறளை ஆட்டிப்பார்க்கட்டும்

நித்தம்
ஒரு
புத்தம் புதுவிஷயம் தெரிந்துகொள்..
அவ்வப்போது
இசையை கேள்…
மனதை லேசாக்கு…
உனக்குள் வாங்கி கரைந்துபோ…
மீண்டும் உருவம் கொள்கையில்
மீண்ட சொர்க்கமாய் தெளிவுகொள்.

உலகத்து விஷயமெல்லாம்
கரைத்துக் குடித்தாலும்…
மூளையில்
ஏராள இடமுண்டு..

நாம்
கற்பது கையளவு..
அதனால்
அறிவை விரிவு செய்….
உன்னால்
கடைசி கவளம் விழுங்கமுடியும் முன்
கல்வியின் மேல்
காதல் கொள்.

எப்போதும் நம்பிக்கை கொள்
இடையறாது உழை.
பொழுதுபோக்கு வைத்துக்கொள்
அதுவும்
புலன்களை காப்பதாய் இருக்கட்டும்

உறவுகளை மட்டுமல்ல
உன்னருகில் உள்ளவர்களை மதி.

“தன்னை நம்பும் மனிதனையே
உலகம் நம்பும்”
என்ற
தத்துவ வரிகளை
தலையாய வரியாக நினை.
உன்னை உயர்வாக
முதலில்
நீயே நினை.

ஒவ்வொரு படிக்கட்டிலும்
உழைத்து முன்னேறு..
சங்கடங்கள் வந்தால்
சரித்திரமாக்காதே
தரித்திரமாகாதே
பவித்திரமாக அனுபவம் கொள்.

உயரத்தில் ஏறுவதை விடவும்
தக்கவைத்துக் கொள்ளுதல்
தரணியில் கடினம்
அதற்கு
அயராது சிந்தனை செய்.
சிலசமயம்
தவறுகள் நேரலாம்
அதற்கு
தண்டனையாக தாழ்ந்து போகாதே.

அந்த
ஆகாய நிலவிலும் கருமை உண்டு
ஆதாம் ஏவாளிலிருந்து
அண்டவெளி வரை
தவறுகள் உண்டு
தைரியமாய் உரக்கச்சொல்

அதன்பின்
அமைதி காண்பாய் மனதில்.
இடம் பொருள் காலம் பார்த்து
எதையும் செய்

தோல்வியெனில் துவளாதே
வெற்றியெனில் துள்ளாதே
மகிழ்ச்சி கொள்
அவ்வப்போது நினைத்துப்பார்த்து
அடுத்த
ஆக்கத்திற்கு அடித்தளம் போடு

மனிதர்களில் பலருண்டு
எத்தனைபேர்
மத்தியில் இருந்தாலும்
தனித்திரு, பசித்திரு, விழித்திரு.

உனக்கென்று
ஓர் இடம்… தனித்தமனதோடு
தாமரை இலைநீராய் ஒட்டாதிரு
ஆரவாரங்களுக்கிடையிலிருந்தாலும்
உன்
ஆழ்மனது திருவாசகம் பாடுவது
அனைவருக்கும் தெரியாதிருக்கட்டும்

புலன் உறுப்புகள்
பூ வுலக மகிழ்ச்சியில் திளைத்திருக்க
உள்ளிருக்கும் இறைவனுக்கு
உன்னத நிவேதனம் செய்

பசித்திரு
பசித்திரு என்றால் வயிறு அல்ல…
செவிப்பசி
சிந்தனை ருசிப்போடு
சீராய் கிடைக்கும்
பகுத்தறிவை
பகிர்ந்து உண்.

எப்போதும்
எதையேனும்
தெரிந்து கொள்ள தாகம் கொள்

உன்
வாசிப்பிற்கு
வானத்திற்கு மேலேயும்
எல்லைகள் விரியட்டும்.

வாசிப்பு என்பது
அருமையான அமுதம்
அது பருக பருக இன்பம்

வாசிப்பது என்பது
புத்தகத்தை மட்டுமல்லை.
ஒவ்வொரு அணுவையும் வாசி…
உன் அனுபவத்தையும் வாசி…
வாசித்தபின் யோசி…

அது
பாசியான சந்தேகங்களையும்
பளிச்சிட வைக்கும்.
‘விழித்திரு’ என்பது
விழிகள் சம்பந்தப்பட்டது அல்ல.

எது வேண்டுமானாலும்
எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.
அத்தனையையும்
எதிர்கொள்
விழிப்பாயிருந்து வெற்றிகொள்.

உறவுகள் எதிரியாகலாம்
உண்மைகள் பொய்யாகலாம்
தன்னந்தனியாக
நீ தவிப்பதுபோல் தோன்றலாம்…
எதுவாயினும்…
வருமுன் காத்து…
வந்தபின் பாத்து
விழிப்பாயிருந்து…
செழிப்பாக்கு வாழ்க்கையை…

உனக்கு
என்னால்
உலகத்தைப் புரியவைக்க முடியாது…
ஏனென்றால்
கடலை 
கவிதைக்குள் காட்ட முடியாது...
இருப்பினும்
இந்த 
கவிதை கண்ணாடி
உனக்கு பின்னாடி புரியும்..
உனக்கு முன்னாடி நிற்கும்
உலகத்தைப் புரியவைக்கும்.

ஒன்றே 
ஒன்று மட்டும் சொல்கிறேன்
"அந்த வாசகம் 
மிகவும் சிறியதுதான்
ஆனால் மிகச்சிறந்தது"
அது
"இந்த நிலையும் மாறிவிடும்"

இடுக்கண் வருங்கால்
சிரிக்க முடியாவிட்டாலும்
இந்த வைர வரிகளை நினை
நீ
என்றென்றும் ஜொலிப்பாய்

என் கண்மணி!
தாயுமானவரை
இந்த உலகம் அறியும்
தந்தையுமானவளை
நீ மட்டும் அறிவாய்!