Wednesday 3 December 2014

நாகை - 2004 'டிசம்பர்-26'

சிவனின் ஊழிக்கூத்துபோல்
கடலின் ஆழிக்கூத்து
சொல்லிக்கொண்டு போகவும்
நேரமின்றி
அள்ளிக்கொண்டு போனது அலை.

மீன்களை
வலை வீசி பிடித்தல்போல்
ஆட்களை
அலைவீசி பிடித்துப்போன
அதிர்வுகளை
இப்போதுதான் அறிந்தோம்

மணலில் கட்டிய வீடுகளாக
மனிதர்களும் வீடுகளும்
புனல்கொண்டு போன
பூகம்பத்தை என்ன சொல்ல?

சின்னச்சின்ன முத்துக்களான
சிப்பிக்குழந்தைகள்
தப்பிக்க வழியின்றி
தனக்குள் கொண்டு சென்றதை
தலைமுறைகள் மறக்காது.

கண்முன்னே
கடல் இருக்கிறதென்று
களித்திருந்தோம்
இப்படி
யமன் ஒளிந்திருந்தது
யாருக்குத் தெரியும்?

அஸ்திகளை மட்டுமே கரைத்த
ஆழ்கடல்
முதல்முறையாக
ஆட்களையும் கரைத்துவிட்டது.

எரிப்பதா?
புதைப்பதா?
என்ற சண்டை
எங்கள் சமுதாயத்தில் உண்டு.
இன்று
உடலாவது கிடைக்காதா
என்று ஊர் ஊராக
அலைந்த பரிதாபம்....

ஒரு காலத்தில்
மதமாற்றத்தால்
மண்டைக்காடு பகுதிகள்
சண்டைக்காடாக திகழ்ந்ததுண்டு
இன்று
எல்லா மனிதரும்
இடம் மாறி புதைக்கப்பட்டு
இனம் மாறி எரிக்கப்படுகிறார்கள்.

கடற்கரையோரங்களில்
கணக்கெடுத்தால்
மாண்டவர்கள் எல்லாம்
மலையாயிருக்கிறார்கள்
மீண்டவர்கள் எல்லாம்
காலண்டரின் கடைசி மாத தேதியாய்
கரைந்து போயிருக்கிறார்கள்.

கடலே
நீ
ஓடிபிடித்து விளையாடுவதற்கு
எங்கள்
உயிர்தானா கிடைத்தது?
இதென்ன கொடுமை
மக்கள் வெள்ளத்தை
மற்றுமொரு வெள்ளம்
மறைத்துக்கொண்டதே.

கடற்கரைக்காற்றை
சுவாசிக்க
காலார நடந்தவர்களின்
மூச்சுக்காற்றை
முடித்து விட்டாய்
உன்னருகில்
வசித்தவர்களையெல்லாம்
வஞ்சித்து விட்டாய்
உன்னை
பூஜித்தவர்களையே
நீ பூஜ்ஜியமாக்கி விட்டாய்.
நீ
உன் ராஜ்ஜியத்தை
விரிவு படுத்தினாயா? அல்லது
சரிவு படுத்தினாயா?

நாகை என்றாலே
உறுதிப்புனல்கள் எல்லாம்
குருதிப்புனல்களாக ஓடிய
கீழ வெண்மணி
சம்பவம்தான் சரித்திரத்தில்
கரையாயிருக்கும்.
கொஞ்சம் நெல்மணி
கூலியாய்
கூட கேட்டதற்காய்
ஆட்களையே
அவித்துவிட்ட
அதிகார வர்க்கத்தின்
அக்கினி வீச்சு
அடி நெஞ்சில் படிந்திருக்கும்
இப்படி
கரை உடைத்து
இரையான கொதிப்பு
இதுவரை இல்லாத பதிப்பு.

பூமியின் உள்ளே
புகைந்து கொண்டிருந்த கனல்
பூகம்பமாய் வெடிக்கும்
கடலில் வெடித்தது
நிலத்தில் வெடித்திருந்தால்
நிஜத்தில்
இங்கே யாரும்
இருந்திருக்க மாட்டார்கள்
இருந்தாலும் கடலே
இனி உன் சாம்ராஜ்ஜியம்
கரையோடு நிற்கட்டும்
கரையேற வேண்டாம்
நாங்கள்
வாழ்வில் கரையேற வேண்டும்

No comments:

Post a Comment