Wednesday 24 December 2014

கணித மேதை இராமாநுஜம்

ஈரோட்டில் பிறந்து
தேரோட்டும் கும்பகோணத்தில் படித்த
எண்கோணம் நீ.

டிசம்பரில் பூத்த
கணித மலர்.

பூஜ்ஜியத்தால்
புகழ்பெற்றவன்.
உனது
ராஜ்ஜியத்தின்
வாசலுக்கு வருவதற்கே கூட
வழிதெரியாமல்
விழி பிதுங்கும் மேதைகள்.

Town High School ல்
Top மாணவன் நீ
அரசு ஆடவர் கல்லூரியில்
மாணவனாக இருந்தபடியே
கணித
போதகராகவும் உருவெடுத்த
வித்தகன் நீ.

எண்களைப்போலவே
எண்ணிடலங்காப் புகழ் உனக்கு
உன்
கண்களின் தீட்சணியம்
கணக்குகளின் தாட்சணியம்

விதிகளை உடைத்து
விடை சொன்னவன் - நீ
% பற்றி சொல்ல
ஹீரோ ஆனவன் நீ

மதியைக் கொண்டே
மலையளவு கணக்கையும்
மனக்கணக்காய்
தினையளவு நேரத்தில்
தீர்வு சொன்னவன் நீ.

காலனின் கணக்கு
உன்னுடைய விஷயத்தில் மட்டும்
உறுத்தலாக உள்ளது.
பால வயதில்
பலபுகழ் பெற்ற உன்னை
இளம் வயதிலேயே
எடுத்துக்கொண்ட
எமனை என்ன செய்ய?

நீ
முடிக்கவேண்டிய கணக்கு
மூளைக்குள் நிறைந்திருக்க
உன்னுடைய
கணக்கை முடித்த
காலனை என்ன செய்ய?

உன்னுடைய தேற்றங்கள்
கணிதத்தில்
கொண்டுவந்த மாற்றங்கள்
அதனால் ஏற்றங்கள்
ஆனாலும் ஏமாற்றங்கள்
முழுமையடையாததால்.

அறிஞர்களின் தொடர்பு கிடைத்து
அயல்நாடு சென்றாய்
உன்னை
உருக்குப்போட்ட நோய்
எலும்புகளை மட்டுமா உருக்கியது
எண்களையும் அல்லவா நொறுக்கியது
எங்களையும் அல்லவா நொறுக்கியது

மறுபடியும்
நீ பிறந்து வர வரமில்லையா
மறுபடியும்
நீ பிறந்து வர வரமில்லையா
ஆயிரம் கால்குலேட்டர்களின்
அவதாரம் நீ
கோடி கம்ப்யூட்டர்களின்
குன்று நீ
உன்
மூளையில் மட்டும்
செல்களுக்கு பதிலாக
எண்கள்தானே இருந்தது
உன்னுடைய உடம்பில் மட்டும்
நரம்புகளுக்கு பதிலாக
நாற்கரத்தேற்றம்தானே இருந்தது
உன்னுடைய உடம்பில் மட்டும்
குருதிக்கு பதிலாக
பரிதி நதிதானே ஓடியது

புதிருக்கெல்லாம்
தீர்வு சொன்னவன் நீ
உன்
வாழ்க்கை மட்டும் புதிரானது எப்படி?
நீ
உன் வாழ்க்கையைக்
கணக்காகத்தான் வகுத்தாய்
கணக்குக்காகவே வகுத்தாய்

உன்னிடத்தில்
பிரதியிட்டுப்பார்க்க
இனியொருவன்
பிறந்துதான் வரவேண்டும்

நீ
கணக்குக்கதிர்களை வெளியிட்ட
கதிரவன்
நீ
ஒரு
கணக்கு π(பை)த்தியம்

கடல் கடந்து பத்தியம் இருந்தும்
எங்களால்
காப்பாற்ற முடியாத பத்திரம் நீ

கோடுகளால்
உருவான சித்திரம் நீ
புகழெனும் கோட்டுத்துண்டுகளால்
நாட்டுடைமையான
கணித சத்திரம் நீ

புள்ளிகளின்
கோலம் மட்டுமே
போடத்தெரிந்தவர்கள் மத்தியில்
புதியதொரு
பள்ளியையே நிறுவிமளவிற்குப்
பாடம் சொன்னவன் நீ.

உனது
சகாவாக
"பகா எண்களை"யே பார்த்தாய்
அதிலும்
"1729" என்ற உண்
இராமானுஜ எண்
என்று பெயர் சூட்டுமளவிற்கு
இறவாப் புகழ் சேர்த்தாய்

எண்களில் மட்டுமல்ல
அன்பிலே
ஹார்டியின்
ஹார்ட்டையே நிறைத்தவன் நீ
கண்களில் கண்ணீர் ததும்ப
முதன்முதலாக
ஒரு
கணித ராஜாவை கப்பலில் ஏற்றி
விடை கொடுத்த
ஹார்டி
உன் வாழ்வின் மைல்கள்.

முப்பத்து மூன்று வயதுகூட
நிரம்பாமல்
விரும்பாமல்
விடை பெற்றாய்.

கணக்கைக் காப்பாற்றிய
உன்னைக்
காப்பாற்ற முடியவில்லை

உன்னை மணந்து
ஒராண்டு மட்டுமே சேர்ந்து வாழ்ந்து
உன்னையும் எண்ணிக்கொண்டு
நாட்களையும் எண்ணிக்கொண்டு
நடுகல்லாய் வாழ்ந்து...
(தொண்ணூறு வயதுவரை வாழ்ந்து)
உனக்குச்
சிறப்புச் சேர்ப்பதற்காகவே
சிலையாய் வாழ்ந்த உண் மனைவி...
உனக்குச்
சமமான
மனான பின்னம்

வயிற்றுக்கும்
மூளைக்கும் நடந்த போராட்டத்தில்
காணாமல் போய்விடாமல்
கணக்குப் போட்டவன் - நீ
அந்த வகையில்
மாணவர்களின்
நம்பிக்கை நட்சத்திரம்.

உன்னுடைய
புதிர்களெல்லாம்
புதிராகவே இருக்கிற்து.
பூட்டிய பெட்டிக்குள்
நீ
கிழித்துப்போட்டதைக்கூட
முழுக்கப் புரியாமல்
மூளையைக் காய்ச்சுகிறது.

நீ
கிறுக்கியவை கூட
கணித சரித்திரமாக
காணப்படுகிறது.

இப்படி
கும்பகோணத்திற்கு
எல்லா கோணங்களின்
Infinite - யாக( \infty) புகழ்சேர்த்த
Integeration - நீ


தோன்றிற் புகழொடு தோன்றுக
அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
என்ற
குறளின்
குறியீடு நீ

உன்
அறிவிற்கு ஈடு எது?
உம்மை வணங்குகிறோம்
கரங்களால் மட்டுமல்ல
கணிதத்தாலும் தான்

Wednesday 10 December 2014

சுதந்திர பூமி

மன்னர் காலம் முதல்
விக்டோரியா மகாராணி காலம் வரை
எம் இந்தியா
வந்தாரை வாழவைத்தது
தான்
வைத்திருந்த செல்வங்களையெல்லாம்
வாரிக்கொடுத்தது
அந்த வகையில் வள்ளல்
அந்த வள்ளல் நாட்டின்
வாரிசுகள் நாங்கள் என்று
துள்ளிச் சொல்வதில் சுகமுண்டு.

சுகமான தமிழ்
ஆங்கிலம் அறிவியல்
கணக்கென்று
எத்தளைப் பாடங்கள் பயின்றாலும்
எங்களுக்குள்
பாடமாகிப்போனது சரித்திரம் தான்.


சரித்திரம் படிக்க வேண்டிய வயதில்
சரித்திரம் படைக்க நினைத்து
இளம் வயதில்
இன்னுயிரைத தந்த
தில்லையாடி வள்ளியம்மை
அவர் தொண்டு
இனி
இல்லையே என்று
இளைத்த காந்திமகான்

மகான்களையே வியக்கவைத்து
கப்பல் ஓட்டிய
கைகளை
செக்கு ஓட்ட வைத்த
சிறைச்சாலை.

சிறைச்சாலையில்
தானே அடைபட கைதிகள்
தானே கட்டிய
"காலாபாணி" சிறைச்சாலை
அதில்
ஆண்டு பல
அடைபட்டுக் கிடந்த "வீரசவர்க்கார்"
சவர்க்காரின் வீரத்தைபோல்
சமர்த்தான வார்த்தைகளால்
கனல் பறக்க
அக்கினி குஞ்சிற்கும்
ஆற்றலுண்டு
என்று
இளம் சிறார்களையும்
இமயமெனப் புகழ்ந்த
முறுக்கு மீசை பாரதி.

முறுக்கேறிய வீரச்செறிவுடன்
சறுக்குமரம் போல் வீழிந்தாலும்
வார்த்தை தவறாத
வணங்காமுடி கட்டபொம்மன்
காசியும் ராமேஸ்வரமும் மட்டுமா
புண்ணியத் தலங்கள்?
போர்ப்ந்தரும புண்ணியத் தலங்கள்தான்
கயத்தாறும் புண்ணியத் தலம்தான்

புண்ணியவான் காந்தி
எதையுமே
நாங்கள் மறக்கவில்லை
தடியை கையில் வைத்துக்கொண்டு
அஹிம்சை பேசிய அண்ணல்
அவரது வார்த்தைகள் எல்லாம் கன்னல்
என்றும் ஒளிதரும் மின்னல்

மின்னலைப்போல்
இன்னமும்
சரித்திரத்தில் பேசிக்கொண்டிருக்கும்
ஊமைத்துரை
ஒருமையுள்
ஆமைபோல் ஐம்புலன் அடங்கிய
தோற்றம் எனினும்
தோட்டாக்களால்
ஆஷ்துரையை
வெறும் சாம்பலெனும்
Ash துரையாக்கிய வாஞ்சிநாதன்.

வாஞ்சையோடு
கொடியோடு பின்னிக்கிடந்த
திருப்பூர் குமரனின் உயிர்
அதில
இழையோடிய இந்திய சுதந்திர தாகம்.

சுதந்திர தாகத்தோடு
முகத்தை மூடாமல்
தாய் மண்ணைப் பார்த்தபடி
தன்னுயிர் நீங்க
ஆசைப்பட்ட பகத்சிங்

சிங்கமாய்
சீறிக்கொண்டிருந்த சுதந்திரப்போரில்...
அந்நியமாக இருந்தாலும்
கண்ணியமாக செயல்பட்ட
அன்னிபெசன்ட் அம்மையார்

யாரும் ஓடிப்போக வழியின்றி
உயிர்போன
ஜாலியன் வாலாபாக் படுகொலை

கொலைகளால்
காந்தியையே
கண்ணீர் சிந்த வைத்த
சௌரி செரா நிகழ்ச்சி
மாதாஜி பிதாஜிக்கு
அடுத்தபடியாக
நினைவுக்கு வரும் நேதாஜி
நேதாஜி படையில் சேர்ந்த
மாதாஜி லெட்சுமி அம்மாள்

அம்மா இல்லாத
இந்திராவை விட்டு
தன் வாழ்நாளில்
13 ஆண்டுகள்
சிறையில் வாழ்ந்த
பாரத ரோஜா
எங்கள் ராஜா நேரு

நேரான நோக்கோடு
சிறுமியாய் இருந்தபோதே
வானரப்படை அமைத்து
பெரிய தலைவர்களுக்கு
ரகசிய சேதி சொல்லி
அரிய உதவி செய்த
இந்திரா காந்தி

காந்தீய வழியில்
இநது-முஸ்லிம்
ஒற்றுமைக்காக பாடுபட்ட
டௌலான அபுல்கலாம் ஆஸாத்

ஆஹா...
இன்னும்
தன் பெயரை
சரித்திரத்தில் பதிவு செய்யாமல்
சுதந்திரத்தில் பதிவு செய்த
கோடானுகோடி வீரர்கள்
சொந்த நாட்டிலேயே தலைமறைவாய்
நாடோடி போல் வாழ்ந்த
நம் தேசபக்தி வீரர்கள்

வீர விவேகமாய்...
இத்தனை களேபரத்திலும்
இந்தியாவின் புகழை
சிகாகோவில்
சிகரத்தில் ஏற்றி வந்த
வித்தகர்
விவேகானந்தர்
ஒரு வேதம்

வேதப்பிரவுகள் போல்
ஆங்காங்கே
அறுபட்டுக்கிடந்த ராஜ்ஜியங்களை
ஆறுதல் படுத்தி
அடையாறு ஆலமரம்போல்
ஒன்றாக இணைத்த
உத்தமர்
சர்தார் வல்லபாய் படேல்

பட்டென்று... சட்டென்று..
மேற்கொண்டு
என்ன செய்வதென்று தவித்தபோது
தாஷ்கண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து
தன்னம்பிக்கையூட்டி
தன்னுயிர் நீத்த
லால் பகதூர் சாஸ்திரி

சாஸ்திரம் பார்க்காமல்
கொட்டும் பனியில்
வெட்டும் நரம்புத் துடிப்பில்
இந்தியா மட்டும்
என்ற நினைப்பில்
இன்றும்
பனியில் பணிபுரியும்
பாரத வீரர்கள்

பாரதத்தில் இல்லாமல்
தலைமறைவு வாழ்க்கை
தான் வாழ்ந்தாலும்
தாய் நாடு
தலைநிமிர செயல்பட்ட
செண்பகராமன்
ஒருவீரத்திரு உரு

ஒரு
வீழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து
வீறு கொண்டு எழுந்து
உலகமே
போற்றக்கூடிய
இந்தியஅரசியல் சட்டம்,
என்றும் நிலைத்திருக்க, வடிவமைத்த…
டாக்டர். அம்பேத்கார்

கார்கால மேகம்போல்
மூட நம்பிக்கைகளால்
கருத்துப் போயிருந்த
சமுதாயப் பழக்க வழக்கங்களுக்கு
சவுக்கடி கொடுத்து
வெளுத்துப்பேசிய
வெண்தாடி வேந்தர்
தந்தை பெரியார்

பெரியாரின்
பிரிய நண்பரான
ராஜாஜி

ராஜாக்களைப்போல
அந்திய நாட்டிலும்
கம்ப்யூட்டர் துறையில்
இன்று
கொடிகட்டிப் பறக்க
வித்திட்ட
விடிவெள்ளி
டாக்டர் இராதாகிருஷ்ணன்

கிருஷ்ணா, ராமா
என்று
ஒரு மூலையில் கிடக்காமல்
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உடையப்பர் ஆக
படையப்பா தைரியம் என்று
பாடலில் சொன்ன பாரதிதாசன்

தாஸ் என்னும்
விஸ்வநாத தாஸ் என்னும்
வீதியெலாம் புகழ் பரவ
நாட்டினைக் காத்திடவே
நாடகங்கள் போட்டாரே
முருக வேடம் போட்டபடி
மூச்சினை விட்டபடி
மேடையிலே கிடந்தாரே
மேலான வீஸ்வநாத தாஸ்

தாசனாகத் 
தமிழுக்கு மட்டுமே இருப்போம்
என்று
எரிந்து போனவர்கள்
இப்படி 
எண்ணிக்கொண்டே போகலாம்
வீரர்களை - முடிவில்லை
எண்ணிக்கொண்டே இருக்கலாம்
வீரத்தை - அழிவில்லை

அழியாத செல்வமான
அன்பை பொதித்தது
இந்திய வேதங்கள்
கற்றுக்கொள்ள
அயல்நாட்டினரின் தாகங்கள்
ஆனால்
இன்றைய இளைஞர்களிடையே
இன்டர்நெட் கனவுகள்
வேளைக்கு
உணவு கிடைத்தது போக
இன்று 
வேலைக்கு உணவு
வீதியோரம் 
முதியோர் இல்லங்கள்

நாம்
விரட்டிவிட்ட அந்நியனை
காசி தியேட்டரில் பார்க்க
காத்திருப்புகள்

அசோகச் சக்கரத்துள்
இப்படி
சின்ன சின்னதாய்....
சோகச் சக்கரங்கள் சுழன்றாலும்
பொக்ரானில்
போட்ட அணுகுண்டு
அமெரிக்காவையே
அயரச் செய்ததே...
நல்லரசான இந்தியா
வல்லரசாக விடுமோவென்று
வலிய வந்து பேசுகிறது.

இவையெல்லாம்
இனியவைதான் என்றாலும்
நம் பூமியை
ஆங்கிலேயர்களைவிட
ஆக்ரோஷமாய்
அல்லும் பகலும்
ஆக்கிரமிக்கும் மாசுகள்பற்றி
இந்த சுதந்திர நாளில்
சுதாரித்துக்கொள்வோம்

உக்கிர வெப்பம்
கக்கித் தவிக்கும் பூமி
வரலாறு காணாத
வெப்ப உமிழ்வினை
மீத்தேனும் - கார்பன்-டை-ஆக்ஸைடும்
மெல்லிய படலத்தை
வான மண்டலத்தின்
வளையமாய் கட்டியிருப்பதை
எத்தனைபேர்
கருத்தில் கொண்டனர்?
உலகத்தின் 
உச்சி மண்டையாம்
ஓசோன் மண்டலத்தில்
ஏற்கனவே
ஏராள ஓட்டைகள்

இப்போது 
பூமியின்
வெப்பத்தை
பூமிக்கே அனுப்பி
பூமியை
வெப்பமாய் வைத்திருக்கும்
இந்த 
வெளிப்படலத்தை
வெளியேற்றுவது எப்போது?
அத்தனைக்கும்
அதிகபட்ச காரணம்(36%)
அமெரிக்காதான் என்றாலும்
மெத்தனமாய் இருக்கின்றார்
மேதினியில் யார் சொல்ல?
புனிதமான
பூமியில் பிறந்துவிட்டோம்
பூமியை 
புனிதமாக வைத்திருப்போம்
என்று
சப்தமாக
சபதமெடுப்போம்
என்று சொல்லி...
நன்றியை காட்டுவோம் பூமிக்கு
சுதந்திர பூமிக்கு.

Wednesday 3 December 2014

"செப்பாத அதிகாரம்..."

மௌனமும் கோபமும்
அழகான கேடயங்கள்

வார்த்தைகள்
அற்றுப்போன நிலை
இற்றுப்போன
மனநிலையைக் காட்டுகிறது.

கோபம்
எதுவும்
என்னைச்சுட்டெரிக்காமல்
சுயம்புவாய்
நானே எரிந்துகொள்ள
எனக்கு உதவுகிறது.

கண்ணகியின்
கோபத்திற்குப்பின்னே
கோவலனின் இழப்பும்
நீதி வழுவிய
நெடுஞ்செழியன் மட்டுமா
நிற்கின்றனர்?

நின்றது
அவளது வாழ்க்கை
தீக்கிரையான மதுரை
ஓர் குறியீடு...
உண்மையில்
அப்படி ஆனது...
அவளது வாழ்வு.

கண்ணகி
வாழ்க்கைப்பட்டதோடு சரி
வாழ்க்கை நிறைவின்றி...
ஆனால்
எத்தகு துன்பத்தையும்
இடம் மாற்றிப்போட்டு
இதமாக வாழ்ந்தாள்
மாதவி.
இதுதான்
இதுதான் இல்லறம்...
ஆம்...
வாழ்ந்தவர்களிடம்
வஞ்சினம் இருக்காது.
ஆனால்...
வாழாதவர்களிடம்
நீதி இருக்கும்...
நெஞ்சுரம் இருக்காது.

"பாரதியின் மயக்கம்"

அன்புள்ள பாரதி
அன்புள்ளம்
உண்டா உனக்கு?
எதற்காகச் சொன்னாய்
இப்படி?
மங்கையராய் பிறப்பதற்கே
நல்ல
மாதவம் செய்திட வேண்டுமென்று?

கருவறைக்குள் இருக்கும் போதே
தொட்டிலுக்கு கட்டுவதா
நாலுகால்
தூளி கட்டுவதா
என்ற தீர்மானம்...

அதற்கும்
தப்பிப்பிழைத்தால்
கள்ளிப்பால்
கள்ளிப்பாலையும்
கடந்துவந்தால்
துள்ளி விளையாடும் வயதில்
துண்டு துண்டாய்
எத்தனையோ சங்கடங்கள்
துண்டிக்கப்பட்டதாய்
துள்ளல் விளையாட்டுகள்
அம்மா அப்பாவின்
குடும்ப பாரமெல்லாம்
கணிசமான அளவில்
எங்களின் தலையில் விழும்.

பழைய சோற்றில் ஆரம்பித்து
அரசு பள்ளிக்கூடம் என்று
பாகப்பிரிவினைகள்
பங்கு போடும்
இத்தனையும் மீறி
எங்கேனும்
வேலைக்குச் செல்கையிலே.....
சேலைக்கு தரப்படும் மதிப்பு
சேதாரத்திற்கு உட்பட்டது.
அது
ஆதாரமாக எதைத்தேடினாலும்
ஆயிரம் கைகள்
அன்பு காட்டும்
அத்தனையும்
அணைத்தே அன்பு காட்டும்.

நாங்கள்
இருந்தால் மட்டும்
வயிற்றில்
நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது போல
என்று
வார்த்தைக்கு வார்த்தை சொல்லும்
வர்ககங்கள்
வாழ்வின் எச்சங்கள் வரை
அத்தனையும் அச்சங்கள்

பூஜித்து பூஜித்தே
பூஜ்ஜியம் ஆக்கியாச்சு
வாழ்க்கை
யாசித்து யாசித்தே
யந்திரமாச்சு

உடம்பின் வலி
உணர்வின் வலி
குழந்தைப்பேறு
குடும்பப்பேறு
கலாச்சாரக் கோட்பாடு
பண்பாட்டுச்சின்னம்
இப்படி...
லொட்டு லொசுக்கு
என்று...
இன்ன பிறவும்...
அத்தனைக்கும்
போராடும் போது
நீரோடும் விழிகளை
நின்று துப்பார்
கிடைத்ல் அரிது.

உண்மையில்
இங்கு
நல்ல துணை கிடைத்தாற்போல்
நற்கதி கண்டவர் இல்லை.
பூலோக சொர்க்கம்
இனிய இல்லறம்...
அதனால்...
பெண்ணாய்ப் பிறத்தல்
மாதவம் அல்ல
அவள்
அற்புதமான ஆணோடு
அன்புற்று இருத்தலே
அழகான தவம் என்று
புறப்பட்டு வந்து
புதிதாய் சொல்லிப்போ பாரதி....!